அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இனி உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இதுவரை இணைவேந்தராக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நிர்வாகியாகச் செயல்படுவார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.
நிர்வாக குளறுபடி மற்றும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. இதை பரிசீலனை செய்த தமிழக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மே 16-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment