போலீஸ் ஸ்டேஷன் போனால் தான் நல்லாசிரியர் விருது கிடைக்குமா: ஆசிரியர்கள் ஆதங்கம்
மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, செப்.,5ம் தேதி நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, மாநிலத்தில் 370 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற குறைந்தது 20 ஆண்டுகள் வரை எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.
மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான செல்பாடுகளில் ஆசிரியர்கள் பங்கு வகித்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, அரசியல் பின்னணி இருக்க கூடாது போன்ற தகுதிகள் விருது பெற பரிசீலிக்கப்படும். இந்தாண்டு, இந்த விருது பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், ஐவர் கமிட்டி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று அந்த ஆசிரியர்கள் குறித்து விசாரித்து, விருதுக்கு தகுதியானவர்களை சிபாரிசு செய்தது.
இதன்பின் பலகட்ட நடவடிக்கைக்கு பின் தான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு புதிய முடிவாக, விருதுக்கு தேர்வான ஆசிரியர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், "தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" என்று சான்றிதழ் பெற்று வரவேண்டும் என, வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.
இதனால், விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல், ஆசிரியர்கள் போலீஸ் ஸ்டேஷன் அலையவேண்டியிருந்தது. பலர் அதுபோன்ற சான்றிதழ் பெற முடியாமல் தவித்து, ஒரு வழியாக அந்த சான்றிதழை பெற்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்குமேல் கல்வி கற்பித்து அனுபவம் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட பின் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று கூறுவது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உத்தரவை கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், என்றனர்.
இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு அதிகம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. சிபாரிசு செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகள் இருந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தாங்கள் தப்பிக்கவே, போலீஸ் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று கடைசி நேரத்தில் வாய்மொழியாக உத்தரவிட்டனர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment