யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிகளில் முறையாக பின்பற்றப்படவில்லை. தற்போது, முன்பு வெளியிட்ட அரசாணையின் படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், யோகா பயிற்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு, 30 நிமிடங்கள் முன்பு யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளவேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை, 15 நிமிடம் யோகா, பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு, 15 நிமிடங்கள் யோகா மற்றும் ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சிகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. யோகா பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தவிர்த்து, பிறரால் இப்பயிற்சியை வழங்க இயலாது. யோகா பயிற்சிகளின் போது, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றவேண்டும். அறிவியல் பாடத்தை கையாளும் ஆசிரியர் கணித பாடத்தை கற்பித்தல் எப்படி இருக்குமோ, அதுபோலவே உடற்கல்வி ஆசிரியர் யோகா பயிற்சி அளிப்பது என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு யோகாவை பிரத்யேக பாடத்திட்டமாக அறிவித்துள்ளது. பாடபுத்தகங்கள் அச்சிடும் பணிகள் தற்போது நடந்துவருகிறது. தொடர்ந்து, யோகா ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர். ஆனால், மாநில அரசு பெயரளவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யோகா நிபுணர் பழனிசாமி கூறுகையில்,''யோகா என்பது பயிற்சியாளர்களால் மட்டுமே கற்பிக்க இயலும். அனுபவம் இல்லாமல், ஒரு நாள் இரண்டு நாள் பயிற்சிகளை மேற்கொண்டோ, யோகா வரைபடங்களை பார்த்தோ கற்பிப்பதில் முழுமையான பலன்களை பெற இயலாது. 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன.
அதில், 10ஐ முறையாக கற்பதற்கே உடல் தன்மை பொறுத்து, மூன்று அல்லது ஐந்து மாதங்கள் தேவைப்படும். அப்படியிருக்க, ஒரு அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் கற்பிப்பதில் முழுமையான பலன் இருக்காது. நல்ல திட்டங்களை பெயரளவில் அல்லாமல், மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தவேண்டும்,'' என்றார். பயிற்சியாளர்களுக்கு கிராக்கி! மத்திய அரசு யோகாவை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தி, மதிப்பெண்களும் மதிப்பீடு செய்யப்பட்டு முழுமையான பாடபுத்தகங்கள் தயாரிப்பு பணி நடந்துவருகிறது. மாநில அரசுகள் கட்டாய பாடத்திட்டமாக அமல்படுத்த அந்தந்த மாநில அரசுகளிடம் முடிவுகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் யோகா பயிற்சியாளர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment